#BREAKING : நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் தேசிய ஊரடங்கு நாளையுடன் முடிகிறது.

இருப்பினும், வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருவதால், ஊரடங்கை மேலும் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கும்படி மத்திய அரசிடம் பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன.

அதே நேரம், மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்கள் தாமாகவே வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.

முன்னதாக, நேற்று முன்தினம் மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக புதிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி, இம்முறை ஒட்டு மொத்தமாக ஊரடங்கை அறிவிக்காமல், கொரோனா பாதிப்பு அடிப்படையில் நாட்டை 3 மண்டலங்களாக பிரித்து ஊரடங்கை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் நாளை காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார்.

தனது உரையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நாளை இரவுடன் முடியவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் உரை முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் நாளை உரையாற்றவுள்ள செய்தி, பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஊடரங்கு நடைமுறையிலுள்ள நிலையில் நீட்டிப்பு பற்றி அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே