தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது.
முடக்கத்தை அறிவித்து 16 நாட்கள் கடந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கடந்த 11-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர்களும் தங்களது முடிவுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒடிஷா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றப்பிரிவு விசாரணை 144-ன் படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி வரை தொடரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாளையுடன் நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பால் அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாத அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் ஓட்டல்களை போல பேக்கரிகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஊரடங்கு நீட்டிப்பு காலத்துக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 உதவித் தொகை தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உதவித் தொகை தரப்படும் என்று அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா தொற்றை ஒழிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.