அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!!

உலகெங்கிலும் ஜனநாயகம் அச்சறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது, இந்தியாவும், அமெரிக்காவும் தங்கள் நாடுகளிலும், உலகெங்கிலும் ஜனநாயகக் கொள்கைகளையும், அமைப்புகளையும் பாதுகாத்து,வலிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு, ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றுதல், குவாட் மாநாட்டில் பங்கேற்பு, பெரு நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றபின் கரோனா விவகாரம் தொடர்பாக தொலைப்பேசியில் மட்டுமே பேசிய பிரதமர் மோடி நேற்று நேரடியாக வெள்ளைமாளிகையில் சந்தித்தார்.

பிரதமர் மோடியை ஜனநாயகக்கட்சியின் எம்.பி. 56வயதான டக்லஸ் எம்ஹாப் வரவேற்றார்.
இந்த சந்திப்பையடுத்து, பிரதமர் மோடி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் ஊடகங்களுக்குக் கூட்டாகப் பேட்டிஅளித்தனர். அப்போது கமலா ஹாரிஸ் பேசியதாவது:

உலகெங்கும் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஆதலால், இந்தியாவும், அமெரிக்காவும் தங்களின் நாடுகளிலும், உலகிலும் ஜனநாயகக் கொள்கைகளையும், அமைப்புகளையும் பாதுகாத்து விலமைப்படுத்த வேண்டும். நம்நாட்டு மக்களின் நலனுக்காக ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதும் அவசியம்

அமெரிக்காவுக்கு இந்தியா மிகவும் முக்கியமான கூட்டாளி. கரோனா பிரச்சினை ஏற்பட்டபோதும், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டபோதும் இருதரப்பும் நம்பிக்கைகளை பகிர்ந்து கொள்வோம். இந்திய-பசிபிக் கடல்பகுதி குறித்து வெளிப்படையாக ஆலோசித்தோம். கரோனா பரவல் நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றினோம். கரோனாவின் தொடக்கத்தில் பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கி முக்கியப் பங்காற்றியது.

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தபோது அமெரிக்கா தேவையான உதவிகளை வழங்கியதை நினைத்துப் பெருமைப்படுகிறது. தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய அரசு மக்களுக்குதடுப்பூசி செலுத்த வேண்டும்.

இந்தியாவிலிருந்து மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியும், வரவேற்புக்கும் உரியது. நாள்தோறும் இந்தியா ஒரு கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவருவது பாராட்டுக்குரியது.
இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்தார்

மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்களா கூறுகையில் ‘ பிரதமர் மோடி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தினர். இரு தலைவர்களின் சந்திப்பு சுமூகமாகவும், நட்புறவோடும் இனிதாகவும் இருந்தது. கரோனா பிரச்சினை, காலநிலை மாற்றம், தீவிரவாதம், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பு, சைபர் பாதுகாப்பு, விண்வெளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்’ எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே