நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை : மக்களை சந்திக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக திட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி தலைமையில், இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்து, ஆறு மாத காலம் நிறைவடைந்து உள்ளது.

இந்நிலையில் அமைச்சகங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது பற்றி பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஒவ்வொரு அமைச்சகமும், தங்கள் துறை சார்ந்த செயல்பாடுகள் கடந்த ஆறு மாதங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமரை சந்தித்து விளக்கின.

வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூகம் சார்ந்த துறைகளில் அதிக கவனம் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாகவே பல்வேறு அமைச்சகங்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுவரும் போராட்டங்களால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவங்களால் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து டெல்லியில் பிரதமர் மோடி, தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்தியதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் பொய்பிரச்சாரங்களை முறியடிக்க, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடம் விளக்குவதற்காக, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேரணிகளை நடத்தவும், சுமார் 250 செய்தியாளர் சந்திப்புகளை நடத்தவும் பாஜக முடிவு செய்துள்ளது.

அடுத்த 10 நாட்களில் சுமார் 3 கோடி குடும்பங்களை சந்தித்து, குடியுரிமை சட்டம் குறித்து விளக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பாஜக செயல் தலைவர் நட்டா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறப்பாக செயல்படாத அமைச்சர்களை நீக்க அவர் முடிவு செய்துள்ளார். இதற்காகத்தான் ஆய்வு கூட்டத்தை அவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே