பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவுக்கு இடம் தர மறுத்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாரதிராஜா, சீமான் உள்ளிட்டவர்கள் சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு பகுதியில் இசை ஸ்டூடியோ அமைத்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களுக்கு இசையமைக்கும் பணியை இளையராஜா மேற்கொண்டுவந்துள்ளார்.
அதற்காக அவர் பணம் எதும் வழங்கவில்லை. இந்த நிலையில் பிரசாத் ஸ்டூடியோவின் நிர்வாகத்தைத் தற்போது முன்னாள் இருந்தவரின் மகன்கள் எடுத்துள்ளனர்.
அவர்கள் இளையராஜாவுக்கு எதற்காக இலவசமாக இடம் வழங்கவேண்டும் என்று கேட்டதாகவும் பின்னர், இளையராஜா பணம் வழங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
இருப்பினும் பிரசாத் லேப்பை வேறு நிர்வாகத்துக்கு வழங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதன் காரணமாகவே இளையராஜாவை வெளியேற்ற முயற்சி செய்கின்றனர் என்று செய்திகள் வந்துள்ளன.
இந்த நிலையில் இளையராஜா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ் திரைத்துறை சார்பில் பாரதிராஜா, பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி, சீமான் உள்ளிட்டவர்கள் பிரசாத் லேப்புக்குச் சென்றனர்.
அப்போது சீமானை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பிரசாத் லேப் முன்னிலையில் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவரும் அனுமதிக்கப்பட்டார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, திரை உலகில் இளையராஜாவிற்கு ஒரு சிறிய பிரச்சனை என்ற காரணத்தின் நிமித்தம் என்னுடைய வார்த்தையை கேட்டு இங்கு இவ்வளவு திரைத் துறையினர் கூடியுள்ளது மகிழ்ச்சி.
கடந்த 45 ஆண்டுகளாக தன்னுடைய பணிகளை இளையராஜா இங்குதான் செய்து வந்தார்.
சுமூக பேச்சுவார்த்தை நடத்த தான் சென்றோம். இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என்றால் ஒரு கால அவசாகம் வேண்டும்.
காலச் சூழ்நிலை காரணமாக திடீரென்று இளையராஜாவை காலி செய்ய சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு குறுகிய காலகட்டம் வேண்டும் என்று கேட்டுள்ளோம். அந்த கால கட்டத்திற்குள் நாங்கள் இளையராஜாவிற்கு மற்றொரு ஏற்பாடு செய்வோம்.
பொறுப்பு நிர்வாகிகள் மட்டுமே உள்ளே இருந்தனர். எம்.டியை இன்னும் சந்தித்து பேச முடியவில்லை. இன்னும் மூன்று நான்கு நாட்களில் அவரை சந்திக்க உள்ளோம்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பின்னர் இளையராஜா வெளியேறுகிறார் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
அவர் இதேபோல் மற்றொரு இடத்தை கலைக்காக தேர்ந்தெடுத்து கொள்கிறார் என்பது தான் அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.