கோட்சே குறித்து சர்ச்சையாக பேசி சிக்கியிருக்கும் ப்ரக்யா தாக்கூர்

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என, பாஜக எம்பி பிரக்யா தாகூர்  மக்களவையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்திருத்தம் குறித்த விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு நாதுராம் கோட்சே தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி பேசினார்.

காந்தி ஒருசார்பு கொள்கையை கொண்டவர் என்பதால் 32 ஆண்டுகளாக அவர் மீது வஞ்சம் கொண்டிருந்ததாகவும், அதனால் காந்தியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் கோட்சே தெரிவித்ததாக ஆ.ராசா கூறினார். 

இதற்கிடையே ஆத்திரத்தில் குறுக்கிட்டு பேசிய பாஜக எம்பி பிரக்யா தாகூர், இந்த விவகாரத்தில் தேசபக்தரை குறிப்பிட்டு பேச வேண்டாம் என தெரிவித்தார்.

பிரக்யாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பிரக்யாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் குரல் எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட சபாநாயகர் ஓம் பிர்லா சமரசம் செய்தார்.

இதற்கிடையே பாஜக எம்பிக்கள் பிரக்யா தாகூரை அமருமாறு கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய், கோட்சேவை தேசபக்தர் என குறிப்பிட்டதற்கு பிரக்யா தாகூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இந்நிலையில் பிரக்யா தாகூரின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பிரக்யாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தாம் பேசியது என்ன என்பதை தெளிவாக கவனிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து வியாழக்கிழமை பதில் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் கோட்சே குறித்த பிரக்யாவின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கோட்சேவை தேசபக்தர் என தொடர்ந்து குறிப்பிட்டு பாஜக வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தி வருகிறது என்றும், பிரக்யாவின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவிப்பாரா? அல்லது மவுனம் காப்பாரா?? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பிரக்யா தாகூர் கூறுவது இது முதல்முறையல்ல.

ஏற்கனவே மக்களவை தேர்தல் பரப்புரையின் போது, கோட்சேவை அவர் தேசபக்தர் என தெரிவித்த போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பிரக்யா, தேசபக்தர் என கோட்சேவை தாம் குறிப்பிடவில்லை என்றும், உத்தம் சிங்கையே குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

தாம் எழுந்து நின்று பேசிய போது தம்மை அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டதால் அமர்ந்ததாகவும், தொடர்ந்து பேசிய திமுக எம்பி ராஜா, கோட்சேவை மையப்படுத்தி பேசியதாகவும் பிரக்யா தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே