நாட்டின் பொருளாதார நிலை குறித்து நிர்மலா சீதாராமன் பேசியபோது தூங்கி வழிந்த அமைச்சர்..!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை நிலவினாலும் பின்னடைவு ஏற்படவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 

நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள தேக்கம் குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆட்சி காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக இருந்ததாகவும், ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் பதவிக் காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாக உயர்ந்ததாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். 

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருந்தாலும் பொருளாதார பின்னடைவு நிலை ஏற்படவில்லை எனக் கூறினார்.

அது ஒரு போதும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது பதிலை ஏற்காத காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதற்கிடையே நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதார நிலையை விளக்கி பேசிக்கொண்டிருக்கும்போது அவர் அருகில் இருந்த பாஜக எம்.பி தூங்கிக் கொண்டிருந்தார்.

அவரை நிதித்துறை இணையமைச்சர் அணுராக் தாகூர் தூக்கத்திலிருந்து எழுப்பினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே