விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு..!!

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விசிகவுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலை விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் இணைந்து சந்திக்கிறது. இதில், வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளை திமுக விசிகவுக்கு ஒதுக்கியுள்ளது.

முன்னதாக பாஜக தமிழகத்தில் காலூன்றகூடாது என்ற நோக்கத்தில் திமுக அளித்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டதாகவும், சட்டமன்ற தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தொல். திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முன்னதாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு சீட்டுகள் ஒதுக்கப்பட்டது.

இதில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்திலும், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன் பானை சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே