பாஜகவின் தமிழக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று சென்னையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ‘தொலைநோக்கு பத்திரம்’ என்னும் பெயரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:

  • விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும்.
  • தமிழக மேல்சபை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி மேலும் 3 மாநகராட்சியாக பிரிக்கப்படும்.
  • 5 ஆண்டுக்கு ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப்படும். தேவையான மணல் இறக்குமதி செய்யப்படும்.
  • 18 முதல் 23 வயது வரையிலான மகளிருக்கு இரு சக்கர வாகன இலவச ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
  • பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலிட மக்களிடமே வழங்கப்படும்.
  • பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கியுள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
  • மின்னணு குடும்ப அட்டை தாரர்களுக்கு குடியுரிமை பொருட்கள் இல்லம் தோறும் நேடியாக வழங்கப்படும்.
  • முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினர், போர் விதவைகளுக்கும் இலவச பேருந்து பயணச்சீட்டு சலுகை வழங்கப்படும்.
  • விதவைகள் நலவாரியம் அமைக்கப்படும். விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 3 ஆயிரமாக உயர்த்தப்படும்
  • பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர்.
  • தாய் மொழியில் மருத்துவக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும்.
  • ஆலய அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
  • பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றும் கோவில் ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யப்படுவர்.
  • இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும்.
  • உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே