டெல்டா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி – முதல்வர்

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரைவில் நல்ல செய்தி வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தபோது, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொல்லப்பட்டதே தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை.

இதுதொடர்பாக முதலமைச்சர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிடவில்லை.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரும் உரிய பதிலளிக்கவில்லை.

டெல்டா மாவட்டங்களில், புதிய திட்டங்கள் வராத வகையில் ஒரு சட்ட முன்வடிவை ஏன் இதுவரை அரசு கொண்டு வரவில்லை என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், அப்படி வலியுறுத்தினால் திமுக நிச்சயமாக முழு அளவில் ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வந்த நிலையில், அதனை அறிவித்ததாகவும், அதற்குண்டான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதில் பிரச்சனைகள் இருப்பதால், சரியான முறையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்துதான் இதை அமல்படுத்த முடியும் என்றும்; விரைவில் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல செய்தி வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே