விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் திமுக சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர்.

அந்தத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 275 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி, அந்தத் தொகுதியில் 13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்  299 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி அந்தத் தொகுதியில், 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்கு அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். 

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொரவி கிராமத்தைச் சேர்ந்த 100 வயது முதியவரான வடிவேல் என்பவர், தனது வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.

21 இடங்களில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாது மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

அங்கு காலை 9 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே