ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் நாளை 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 27-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் 315 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது.
27 மாவட்டங்களில் 46,639 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்கள் நடைபெறும் இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு வரிசையில் நின்றால் அவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் வழங்கப்படும்.
நாளைய வாக்குப் பதிவுக்கு 25,008 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 60,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் 1551 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
ஆகையால் இங்கு நடைபெறும் வாக்கு பதிவை அதிகாரிகள் நேரடியாக வெப் கேமரா மூலம் கண்காணிக்க உள்ளனர்.