திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 47 ஆண்டு காலம் திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் முதுபெரும் தலைவர் க. அன்பழகன் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் பேராசிரியர் அன்பழகன் என குறிப்பிட்டுள்ள கமல், அவரது இழப்பு வேதனைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
க. அன்பழகனின் குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.