டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் மீதான தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டுப்படுத்தும் பாசிச சக்திகள் மாணவர்களின் துணிச்சலான குரலை கேட்டு அஞ்சுவதாகவும், அந்த அச்சத்தின் வெளிப்பாடே இந்த தாக்குதலுக்கான காரணம் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதே போன்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரமும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மாணவர்கள் மீதான தாக்குதலை அரசே ஊக்குவிப்பது வருத்தம் அளிப்பதாகவும் பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் பல்கலைக்கழக கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முற்றிலும் எதிரானது என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.