போலீஸ் வேடம் பிடிக்காது; திருநங்கையாக நடிக்க விருப்பம் – ரஜினிகாந்த்

கிரிமினல்கள் பின்னால் ஓடவேண்டியிருக்கும் என்பதால் தனக்கு போலீஸ் வேடமே பிடிக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பாரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இதில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.

சந்திரமுகி, குசேலனைத் தொடர்ந்து ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார்.

இப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் டிரெய்லர் மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது.

விழாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், தனக்கு போலீஸ் வேடமேற்று நடிக்கவே பிடிக்காது என்றார்.

எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பம் எனக் கேட்டதற்கு திருநங்கையாக நடிக்க விருப்பம் எனக் கூறி கேள்வி கேட்டவரை ஆச்சரியப்படுத்தினார் ரஜினி.

ஆதித்யா அருணாச்சலம் சோகமான கேரக்டர் என்றும் மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும் என்றும் ரஜினி கூறினார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உங்கள் கருத்து என்ன என்று ரஜினியிடம் கேட்கப்பட்டது. அப்போது இது அதற்கான தளம் இல்லை என்று கருத்து தெரிவிக்க ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே