நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கவும் அதுவரை படத்தை வெளியிட தடை கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு என்கிற புல்லட் பிரபு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்
அதில், “கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் “கர்ணன்” திரைப்படத்தின் டீசரும் “கண்டா வரச்சொல்லுங்க” எனும் பாடலும் யூ சான்றிதழ் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. அதேபோல பண்டாரத்தி புராணம் எனும் பெயரில் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலில் “பண்டாரத்தி என் சக்காளத்தி” எனும் வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டி பண்டாரம் என்பது மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு சமூகம். பண்டாரம் என்னும் பெயரிலும் ஜோகி, யோகேஸ்வரர் உள்ளிட்ட துணை பெயர்களிலும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். கோயில்களில் பூ மற்றும் மாலை வியாபாரம் செய்வோரில் பெரும்பாலானவர்கள் இந்த சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பர்.
இந்நிலையில் அவர்களை காயப்படுத்தும் விதமாக கர்ணன் திரைப்படத்தில் பண்டாரத்தி புராணம் பாடல் இடம்பெற்றுள்ளது. இது விதிகளுக்கு எதிரானது. மேலும் பிப்ரவரி 19ம் தேதியே முறையான அனுமதி சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், ஜனவரி 31ம் தேதியே யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. இதுவும் சட்டவிரோதமானது. ஆகவே, கர்ணன் படத்தின் டீஸர், “கண்டா வரச்சொல்லுங்க” மற்றும் ” பண்டாரத்தி புராணம்” பாடல்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சான்றிதழை ரத்து செய்யவும், பண்டாரத்தி புராணம் பாடலை யூடியூப் சேனல் மற்றும் கர்ணன் படத்திலிருந்து நீக்கவும் அதுவரை படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு திரைப்பட தணிக்கைத்துறையின் மண்டல அலுவலர், கர்ணன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, think music India யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.