ஜார்க்கண்ட் மாநிலம் சஹிப்காஞ்ச் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் இளம்பெண்ணை கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினர். இது மனிதாபிமானமற்ற செயல் என்றும், கண்டனத்திற்கு உரியது என்றும் மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காவல் அதிகாரியின் இந்த செயல் முற்றிலும் வெட்கக்கேடானது என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர் , இது போன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
காவல் அதிகாரியின் தாக்குதலுக்கு உள்ளான பெண், காதல் திருமணம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் என்ன நடந்தது என்பது தொடர்பான முழு தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள டிஜிபி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.