கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு

இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட அந்த இடத்தில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈபிவி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இதற்காக அங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

சண்டைக்காட்சிக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், ராட்சத கிரேன் உதவியுடன் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

புதன்கிழமை இரவு சுமார் ஒன்பது மணியளவில் படப்பிடிப்பு தளத்தில் கமல் ஹாசன், ஷங்கர் உள்ளிட்டோர் அமர்ந்து கொண்டு அடுத்த காட்சி குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் திடீரென சரிந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் சங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, படப்பிடிப்பு தளத்தில் உணவு தயாரிப்புக் குழு உதவியாளராக பணியாற்றி வந்த மது, உணவுப்பொருள் விநியோக மேலாளராக இருந்த சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த வாசு, அருண் பிரசாத், குணபாலன், திருநாவுக்கரசு உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

இதில் லேசான காயம் அடைந்த 4 பேர் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

கை, கால்களில் பலத்த காயம் அடைந்த 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கமல் ஹாசன், ஷங்கர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

விபத்து குறித்து தகவலறிந்து சென்ற நசரத்பேட்டை போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் உயிரிழப்பிற்கு காரணம் கிரேன் இயக்கிய ராஜனின், அனுபவம் இன்மை மற்றும் அஜாக்கிரதைதான் காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரேன் ஆபரேட்டர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார்.

லைகா நிறுவனம் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் என சம்பவ இடத்தில் இருந்த அனைவருக்குமே சம்மன் அனுப்பி நடந்தது என்ன என்பதை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

விபத்து எப்படி நடந்தது என்பது? ஊழியர்களுக்கு ஏன் இன்ஸூரன்ஸ் எடுக்கவில்லை? உரிய பாதுகாப்பு அனுமதி பெறப்பட்டதா? என்று பல கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே