பா.ம.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளர்கள் கணேஷ், பி.வி.செந்தில், தீனதயாளன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இணை செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 10 கட்டளைகளை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் டாக்டர் அன்புமணி ராமதாசின் அருகில் நின்று இளைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி
இளைஞர் அணியின் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு ஒரு இளைஞரை தர வேண்டும். அவர் விலைபோகாதவராக, வலிமையானவராக, உண்மையானவராக இருக்க வேண்டும். என் தம்பிகளாகிய நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் களத்தில் நிற்கிறேன்.
நாம் இப்போது கூட்டணியில் இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். அதில் அதிக வாய்ப்பு இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் கோரிக்கை வைத்து உள்ளேன்.
உறுதியாக தமிழகத்தில் விரைவில் பா.ம.க. ஆட்சி நடைபெறும். இதனை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ஏன் என்றால் என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அது என்ன மந்திரம் என்று இப்போது சொல்லமாட்டேன். நேரம் வரும்போது சொல்லுவேன். மாற்றங்களை இளைஞர்கள் சக்தியால் கொண்டுவர முடியும். இளைஞர்களால் செய்ய முடியாதது எதுவும் கிடையாது என்பதை மனதில் வைத்து தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றத்தை கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்டண உயர்வு
டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ படிப்புக்கும், பட்ட மேற்படிப்புக்கும் இந்திய மருத்துவ குழு கட்டண உயர்வை பரிந்துரை செய்து இருக்கிறது. இது தேவையில்லாத ஒன்று. இது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மருத்துவ கல்வி வியாபாரமாக மாறிவிடும். இந்த கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் வழங்க வேண்டும்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்த கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் 88 முதல் 90 சதவீதம் பேர் முன்னேறிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு சில நிறுவனங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது. இது சமூகநீதிக்கு எதிரானது. எனவே, இந்த நிறுவனங்கள் முழுமையாக இடஒதுக்கீடு கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
சோனியாகாந்திக்கு பாதுகாப்பு
தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நீர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள 20 நீர் பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அண்டை மாநில ஆறுகள் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நிச்சயமாக பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.