பெண்களின் திருமண வயது…! பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்ற ராமதாஸ்

சென்னை: பெண்களின் திருமண வயதை உயர்த்தும் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார்.

நேற்றைய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் செங்கோட்டையில்  தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசிய பிரதமர் மோடி, பெண்களின் திருமண வயது உயர்த்தப்படும்.

அதை பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்தவுடன் சரியான முடிவு எடுக்கப்படும் என்று பேசினார். அவரது இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் பிரதமரின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய விடுதலை நாள் விழாவில் செங்கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். பிரதமரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

உலகில் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அதற்கான காரணங்களில் முதன்மையானது பெண்களுக்கு இளம் வயதில் திருமணமாவதும், இளம் வயதிலேயே அவர்கள் தாய்மையடைவதும் தான். அவர்களின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு குழந்தைகளுக்கு நீடிப்பதால் இந்தியாவில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்தப் பட்டால், அது நுண்ணூட்டச்சத்துக் குறைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை .அந்த வகையில் மத்திய அரசின் திட்டம் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

உடல்நலம் மற்றும் நுண்ணூட்டச்சத்து சார்ந்த பிரச்சினைகள் மட்டுமின்றி, சமூகச் சீரழிவுகள் சார்ந்த சிக்கல்களை தடுப்பதற்கும் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டியது அவசியமாகும். பதின்வயதில் உள்ள பெண் குழந்தைகள் காதல் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாத வயதிலேயே காதலில் விழுவதும், அவர்கள் சார்ந்த உடமைகளுக்காக வீழ்த்தப்படுவதும் அதிக அளவில் நடக்கின்றன .பெரும்பான்மையான காதல்கள் பெண்ணின் அன்பை இலக்காகக் கொள்ளாமல், பெண் சார்ந்த குடும்பத்தின் சொத்துகளை இலக்காகக் கொண்டே அரங்கேற்றப்படுகின்றன.

இத்தகைய பக்குவமற்ற காதல் விளைவாக நடைபெறும் திருமணங்களில் பெரும்பாலானவை ஒரு சில ஆண்டுகளிலேயே தோல்வியடைகின்றன. அதனால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமின்றி அந்த பெண்ணின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தின் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொள்ளும் சோகங்களும் அதிகமாக நடக்கின்றன. அவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இதற்கான ஒரே தீர்வு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது தான் என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் பக்தவச்சலா, கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு, 12.05.2011 அன்று அளித்தத் தீர்ப்பில் உறுதியாக பரிந்துரைத்துள்ளது. “இந்திய பெரும்பான்மையினர் சட்டத்தின்படி ஒரு மைனரின் சொத்துக்களுக்கு அவருக்கோ பாதுகாவலராக இன்னொருவர் நியமிக்கப்பட்ட போது மைனருக்கு 21 வயது நிறைவடையும் போது தான் அவர் மேஜராகிறாரே தவிர, அதற்கு முன்பாக இல்லை.

எனவே, 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண் தங்களுக்கு ஏற்ற துணையா என்பதை பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டு, அந்த முடிவுக்காக பின்னர் தான் வருத்தப்படுகின்றனர். இதைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்” என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேபோன்ற வழக்கில், 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் மணிக்குமார், ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு, “பெண்கள் ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கும், வாக்குரிமை பெறுவதற்கும் வேண்டுமானால் 18 வயது சரியானதாக இருக்கும் ஆனால், காதலித்து மணம் புரிவதற்கான பக்குவமும், உளவியல் முதிர்ச்சியும் 18 வயதில் நிச்சயமாக கிடைக்காது. எனவே, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து அரசு ஆராய வேண்டும்” என்று பரிந்துரைத்து உள்ளது. ஆணுக்கு இணையாக பெண்ணின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்று சட்ட ஆணையம் 2019-ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறது

இந்தியப் பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆனால், அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. பக்குவமற்ற வயதில் வரும் காதலும், திருமணமும் தான் பெரும்பான்மையான பெண்களின் சாதனைகளுக்கு தடையாக உள்ளன. பெண்கள் சாதிப்பதற்கு வறுமையை விட பெரும் சுமையாக இருப்பவை இந்த இரண்டும் தான். அந்தத் தடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் .பெண்கள் கல்வியின், பிற துறைகளிலும் சாதனை படைப்பது உறுதி செய்யப் பட வேண்டும். அதற்காக வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே