புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் – தலைவர்கள் வரவேற்பு..!!

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு மத்திய பாஜக அரசால் அமல்படுத்தப்பட்ட புதிய 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பானது எதிர் வரும் தேர்தல்களை கணக்கில் கொண்டே வெளிவந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில், “மக்கள் போராட்டங்கள் பெற முடியாத வெற்றியை வரவுள்ள தேர்தல்களின் பயம் வென்றிருக்கிறது; பிரதமரின் அறிவிப்பு கொள்கை மாற்றத்தாலோ, மனமுவந்தோ நிகழவில்லை, தேர்தல் பயம் காரணமாகவே வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

அதேபோல ராகுல் காந்தி, “நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது; அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

“மக்கள் சக்தி கோட்டை கதவுகளை விட வலிமையானது; போராட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு வலுசேர்த்த விவசாயிகளுக்கு நன்றி, களத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர்வீசும்” என பிரதமரின் அறிவிப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!

உழவர் பக்கம் நின்று போராடியதும் – வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்.

மேலும், பாமக தலைவர் ராமதாஸ், “வேளாண் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் ஓராண்டாக கடுங்குளிர் உள்ளிட்ட கொடுமைகளை அனுபவித்து போராடினார்கள்; 150-க்கும் மேற்பட்ட உழவர்களை இழந்தனர். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதித்துள்ளனர். இது உழவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி!

உழவர்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். இதைக் கருத்தில் கொண்டு கோதாவரி – காவிரி உள்ளிட்ட நதிநீர் இணைப்புகள், பாசனத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். விளைபொருள் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!” என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே