மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில், இச்சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்தாகும்வரை காத்திருக்கப் போவதாக சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும். ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்.ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 11 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் இன்னும் ஒரு சில நாட்களில் ஓராண்டை எட்டவிருக்கிறது. இதுவரை 700 விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், ஒரு பகுதி விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம். போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால், விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு தத்தம் களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்” என்று பேசினார்.
வரவேற்கிறோம்.. ஆனால் காத்திருப்போம் :
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில், இச்சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்தாகும்வரை காத்திருக்கப் போவதாக கிசான் முக்தி மோர்சா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
“பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதில் மகிழ்ச்சி. அந்த அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், இச்சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்தாகும்வரை காத்திருக்கப் போகிறோம். அந்த நாள் தான் எங்களுக்கு வரலாற்று வெற்றி கிடைத்த நாளாக அமையும்” என்று கூறியுள்ளனர்.
டெல்லியில் ஒலித்த கிசான் ஜிந்தாபாத் :
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லியில் விவசாயிகள், இனிப்புகளைப் பகிர்ந்து ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிசான் ஜிந்தாபாத் என்ற கோஷம் போராட்டக் களம் முழுவதும் ஒலித்தது.