பிரதமர் மோடி மக்களை திசை திருப்புகிறார் – திருமாவளவன்

தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அமித்ஷா கூறியுள்ள நிலையில், அத்தகைய திட்டம் ஏதுமில்லை என பிரதமர் மோடி கூறுவது, மக்களை திசைதிருப்புவதாக உள்ளதென திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அனுமதியின்றி நடந்த பேரணியில் பங்கேற்றது தொடர்பான வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் பேட்டியளித்த அவர், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை, ஊடகங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டதாகவும், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும், என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில், அதுபோல திட்டம் ஏதுமில்லை என பிரதமர் மோடி கூறியிருப்பது மக்களை திசை திருப்பும் செயல் என்றும் கூறினார்.

மேலும் நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே