பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு : முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பிரதமர் நரேந்திரமோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 11-ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அப்போது அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சிறப்பு மிகுந்த இடங்களையும் பார்வையிட உள்ளனர்.

இதையடுத்து மாமல்லபுரத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப்பணிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றம், உட்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உத்தரவிட்டார்.

இரு தலைவர்களும் பார்வையிடவுள்ள புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

தலைவர்கள் இருவரும் நடந்து செல்வதற்கான நடைபாதை அமைக்கும் பணிகள், புல்தரை அமைக்கும் பணிகள், சிற்பங்களை இரவிலும் கண்டுகளிக்கும் வண்ணம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்விளக்குகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே