தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக வலுவடையும் என்றும், தற்போது புதுச்சேரிக்கு 370 கிமீ தொலைவிலும் சென்னைக்கு 420 கிமீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் எதிரொலியால் அத்தியாவசியப் பணிகள் தவிர, அரசு அலுவலகங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு நிவர் புயலை எதிர் கொள்ள, நாளை (25.11.20) பொது விடுமுறை அறிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விற்பனை அத்தியாவசிய சேவையினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களும் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயங்கும்.

நாளை புயலினை எதிர்கொள்ளும் மாவட்டங்களான கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல் டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

புயல் கரையை கடந்த பிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் விற்பனை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல விற்பனை நடைபெறும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே