பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு..!!

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நான்காவது நாளாக முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 30 காசுகளும் அதிகரித்தன. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது.

சென்னையில் வியாழக்கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.100.86 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.96.26 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் ஒரு லிட்டா் டீசல் ரூ.98.80ஆகவும், சென்னையில் ரூ.95.59ஆகவும் அதிகரித்தது. தில்லியில் ஒரு லிட்டா் டீசல் ரூ.91.07 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வார காலத்தில் 6 ஆவது முறையாக பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது. இதேபோல் இரண்டு வாரங்களுக்குள் 9-ஆவது முறையாக டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மீண்டும் ஒரு லிட்டா் பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ஆகவும், டீசல் ரூ.95 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் எரிப்பொருள்களின் விலையால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே