குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டை அப்புறப்படுத்த உத்தரவு..!!

குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சாமி கோயிலுக்குச் சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஏற்கெனவே புகார் எழுந்தது.

2013ஆம் ஆண்டு குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், தங்களுடைய பூங்கா அமைந்துள்ள இடத்தில், 21 ஏக்கர் கோயில் நிலம் என்று கூறி, ஆக்கிரமித்த இடத்துக்கான குத்தகைத் தொகையை வழங்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, இன்று (அக். 07) நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், கடந்த 1995-ம் ஆண்டில், சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்குக் குத்தகைக்கு விட்டதாகவும், அதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர், கோயில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததால், இதைப் பயன்படுத்திக்கொண்டு, குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக இந்த நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவற்றின் குத்தகைக் காலம் 1998ஆம் ஆண்டே முடிவடைந்துவிட்ட நிலையில், குயின்ஸ் லேண்ட் தொடர்ந்து நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்திருந்ததாகவும் வாதிடப்பட்டது.

மேலும், வருவாய்த் துறையினருக்கும், இந்து அறநிலையத் துறைக்குமிடையே உள்ள பிரச்சினையை, தங்களுக்குச் சாதகமாக குயின்ஸ் லேண்ட் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், அந்த நிறுவனம் வருவாய்த்துறைக்கு 1 கோடியே 8 லட்சத்து 69 ஆயிரத்து 423 ரூபாயையும், அதேபோல் கோயிலுக்கு 9.5 கோடி ரூபாயையும் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே