தந்தை பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு

பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரஜினி அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

துக்ளக் விழாவில் பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவிட்டால், தர்பார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பாக போராட்டம் நடத்தப்படுமென திராவிடர் விடுதலை கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது ராமர், சீதை உருவங்களை உடையின்றி எடுத்து வந்து செருப்பால் அடித்தாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிட இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியைப் பரப்பி, பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். 

அதில் பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்; இல்லையெனில் தர்பார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே