வழிப்பாட்டு தலங்களை திறந்தால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் மக்கள் கூடக்கூடிய திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மத வழிப்பாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் தெரிவித்தது.
மேலும், பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை எனவும், மத்திய அரசு மத வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதையும் குறிப்பிட்டது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், அனிதா சுமந்த் அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.