“சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!” – ‘சுட்டிக் குழந்தை’ சாம் கரன்

கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியதால் தன்னுடைய ஆட்டத்திறன் மேம்பட்டது என்று இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டி20 போட்டிகள் வரும் 12-ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து டி20 அணியில் சாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் கரன் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடினார். அவரை சிஎஸ்கே ரசிகர்கள் சுட்டிக் குழந்தை சாம் கரன் என அன்புடன் அழைத்தார்கள். இப்போது அகமதாபாத்தில் இருக்கும் அவர் பேட்டியளித்துள்ளார்.

அதில் “கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு பின்பு என்னை நான் மேம்படுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். சிஎஸ்கே அணியில் எனக்கு வெவ்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. தொடக்க வீர்ராகவும், 3 ஆவது பேட்ஸ்மேனாகவும் களமிறங்கினேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அதன் காரணமாக என் திறனை மேம்பட்டதை நான் உணர்ந்தேன். ஐபிஎல் ஒரு அற்புதமான டி20 தொடர். அதுவும் இந்தியாவில் விளையாடுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்” என்றார்.

மேலும் “ஐபிஎல் தவிர இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. அதற்கு தயாராவதற்கு இந்தத் டி20 தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார் சாம் கரன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே