பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் விடுப்பு வழங்கக் கோரி பேரறிவாளனின் தாயார் தொடர்ந்த வழக்கில், பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், ‘எனது மகன் பேரறிவாளன் தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறாா். அங்கு 50 கைதிகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எனவே அவருக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

கடந்த முறை நடந்த விசாரணையின்போது, பரோல் கோரிய மனுவை நிராகரித்து விட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.பிரதாப்குமாா், ‘பேரறிவாளன் கடந்த ஜனவரி மாதம் விடுப்பில் சென்று விட்டு சிறைக்குள் வந்துள்ளாா்.

சிறை விதிகளின்படி 2 ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியும். பேரறிவாளனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

சிறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளதால், பேரறிவாளனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என மனுதாரா் அச்சப்படத் தேவையில்லை.

பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றி இருந்தாலும், சிறைக்குள் இருக்கும்வரை அவா்கள் சிறை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என வாதிட்டாா்.

இந்த நிலையில், 90 நாள்கள் விடுப்பு கேட்ட அற்புதம்மாளின் வழக்கில், பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அற்புதம்மாளின் மனுவை தமிழக அரசும் சிறைத் துறையும் நிராகரித்துவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் 30 நாள்கள் விடுப்பு வழங்கியுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்தில் பேரறிவாளனை பரோலில் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே