கர்ப்பிணி யானைக்கு நேர்ந்த கொடூரம் ; அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொன்ற மக்கள்!

கர்ப்பிணி யானை ஒன்றை அன்னாசி பழத்தில் வெடி வைத்து பொதுமக்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸை தாண்டி தற்போது சமூக வலைதளங்களை உலுக்கிவருகிறது கேரள யானை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்.

கடந்த புதன்கிழமை, மலப்புரம் அருகே உள்ள வெள்ளியாறு பகுதியில் நின்றபடி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

அந்த யானை உயிரிழந்ததற்கான காரணத்தை மலப்புரம் வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில், காட்டு யானை ஒன்றை இந்த பகுதியில் வாழும் மக்கள் அன்னாசிப் பழத்தில் மிகவும் பயங்கரமான வெடிமருந்தை வைத்து கொடுத்துள்ளனர்.

எனவும் அவர்களை நம்பி அதனை வாங்கி சாப்பிட்ட காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அன்னாசிப் பழத்தை யானை சாப்பிட்டு அதில் இருந்த வெடி மருந்து யானையின் வாயிலேயே வெடித்ததால் யானை பலத்த காயம் அடைந்துள்ளது.

கொடூர பசி மற்றும் வலி மிகுதி காரணமாக ஊருக்குள் யானை அங்குமிங்கும் அலைந்துள்ளது.

எனினும் அங்கு உள்ள யாரையும் காயப்படுத்தவில்லை. ஒரு வீட்டை கூட சேதப்படுத்தவில்லை. அதனால் தான் அந்த யானை நன்மை நிறைந்தது என்று கூறுகிறேன்.

இன்னும் 18 அல்லது 20 மாதங்களில் அந்த யானை குட்டி ஈன்றெடுக்கும் நிலையில் இருந்தது.

ஊருக்குள் சென்று உணவு தேடி அலைந்து இறுதியில் வெள்ளியாற்றில் நின்று கொண்டு, தன் காயத்தில் ஈக்கள் மொய்க்கக்கூடாது என்பதற்காக தண்ணீரை வாய்க்குள் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது.

எங்களுக்கு இது குறித்து தகவல் கிடைத்ததும் இரண்டு கும்கி யானைகளைக் கொண்டு காயம்பட்ட யானையை காப்பாற்றச் சென்றோம்.

ஆனால், அந்த யானைக்கு தான் உயிர்பிழைக்க மாட்டோம் என்பது முன்னரே அறிந்திருக்கும் போல. அதனால் மீட்புப் பணியையும் சரியாக நடத்த அனுமதிக்கவில்லை.

கடைசி நிமிடத்தில் அந்த யானை தன்னைப் பற்றி யோசிக்காமல் தன் வயிற்றில் உள்ள குட்டியைப் பற்றி மட்டும்தான் யோசித்திருக்கும்.

மே 27ம் தேதி மாலை சுமார் 4 மணி அளவில் அந்த யானை ஆற்று நீரில் நின்றபடியே உயிரிழந்திருக்கிறது” என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவர்கள் யானை இறந்தபின்னர் அதன் உடலை மீட்டு இறுதிச்சடங்கை நடத்தி முடித்துள்ளனர். யானைகள் இவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்படுவது இது முதல்முறையல்ல.

கடந்த வருடம் தந்தத்திற்காக யானை கொல்லப்பட்ட சம்பவம் உலகெங்கிலும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரளாவிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது மிகவும் அதிர்ச்சியையும் கவலையையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே