பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்..! – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைக்கென தனிப் பிரிவு நாளை மறுநாள் (ஜூலை 20) முதல் செயல்படத் தொடங்கும் என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தெரிவித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, கரோனா பரிசோதனை பணிகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று நேரில் ஆய்வு செய்து, கூடுதல் ஆர்டிபிசிஆர் கருவிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் தூத்துக்குடி டூவிபுரம் உள்ளிட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1405 பேர் முழுமையாக நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.

52 கர்ப்பிணிகள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1094 படுக்கைகள் தயாராக உள்ளன. இதில் 240 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கும் குழாய் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 26 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் 24 பேர் பூரண நலம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மதுரையில் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 4 பேரும் நலமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண நலம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும் என அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

வரும் திங்கட்கிழமை (ஜூலை 20) முதல் சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு என தனிப்பிரிவு செயல்படவுள்ளது என்றார் அவர்.

ஆய்வின் போது தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், மாநகராட்சி நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே