சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு

கொரோனா பாதிப்பால் நேற்று மரணமடைந்த சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய, அண்ணாநகர் வேலங்காடு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸ் வாகனத்தை தாக்கியதோடு, பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும், தினசரி நாளிதழில் பணியாற்றும் இருவருக்கு தொற்று உறுதியானது.

துயரம் தரும் செய்தியாக, சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் இயக்குநராக இருக்கும் 58 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

நரம்பியல் நிபுணரான அவரின் உயிரிழப்பு, கொரோனாவுக்கு தமிழகத்தின் முதல் மருத்துவர் உயிரிழக்கும் சம்பவமாக அமைந்தது.

இந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களில் சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தன.

மேலும், ஆம்புலன்ஸில் இருந்த பணியாளரும் காயமடைந்தனர்.

இதனை அடுத்து, கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டுபின்னர் காவல்துறை பாதுகாப்போடு உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் காவல்துறை கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே