எந்த சலசலப்புக்கும் அதிமுக அஞ்சாது – அமைச்சர் ஜெயக்குமார்

கிராம சபைக் கூட்டங்களில் திமுக விடுக்கும் மிரட்டல்களுக்கு அ.தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டை ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னை தரமணி பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பையும், 2 ஆயிரத்து 500 ரூபாயையும் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க நடத்துவது கிராம சபையா? அல்லது குண்டர் சபையா? எனக் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்ததாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமை இருப்பவரே உண்மையான தலைவராக இருக்க முடியும் எனவும், கேள்விக்கு பதிலளிக்கும் தைரியம் இன்றி தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீண் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும், மாறன் சகோதரர்கள் ஒரு புறம், கனிமொழி ஒருபுறம், மு.க அழகிரி ஒருபுறமென ஆட்சியை பிடிக்க தி.மு.க தரப்பில் ஒவ்வொருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு இருப்பதாக கூறிய அவர், எந்த ஒரு சலசலப்புக்கும் அ.தி.மு க அஞ்சாமல் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே