டிசம்பர்.1 முதல் பாஸ்ட்டேக் கட்டாயம் – இல்லையேல்., 2 மடங்கு கட்டணம்!

தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் பாஸ்ட்டேக் கட்டயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்ட்டேக் வசதியில்லாத வாகனங்கள், பாஸ்டேக் தடத்தின் வழியே சென்றால், இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்பிளாசாக்களில், வகை வாரியாக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாஸ்ட்டேக் டிஜிட்டல் கட்டணத் திட்டம், வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள், ரொக்கமாக கட்டணம் செலுத்தி பயணிக்க, ஒரு வழித்தடத்திற்கு, ஒரு நுழைவு வாயில் ஏற்படுத்தப்படும்.

சுங்கச்சாவடிகளில், பாஸ்ட்டேக் வசதியில்லாத வாகனங்கள், பாஸ்ட்டேக் தடங்களில் பயணிக்க விரும்பினால், இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள்துறை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில், கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படி, சுங்கச்சாவடிகள் வழியாக பயணித்த 6 லட்சத்து 11 ஆயிரம் வாகனங்களில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே பாஸ்ட்டேக் வசதி கொண்டவை எனத் தெரியவந்திருக்கிறது.

வருகிற ஒன்றாம் தேதிக்குள் பாஸ்ட்டேக் வசதிக்கு மாறுமாறு வாகன உரிமையாளர்களை அறிவுறுத்துவதோடு, அதற்காக சுங்கச்சாவடிகளிலும், ஸ்டால்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக, நெடுஞ்சாலைகளை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்த ஃபாஸ்ட்டேக் வசதி, RFID எனப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதன்மூலம், டோல்பிளாசாக்கள் அருகே, 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது, ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்ப சாதனம், பாஸ்ட்டேக் மூலம் வாகன விவரங்களை கிரகித்துக் கொண்டு, அவை செல்ல அனுமதிக்கும்.

பாஸ்ட்டேக் கணக்குகள் தொடங்க, வாகன பதிவுச்சான்று, வாகன உரிமையாளரின் புகைப்படம், ஆதார அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்றுகள் வேண்டும்.

ஒருவர், ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருந்தால், ஒவ்வொன்றுக்கும் என தனித்தனியாக பாஸ்ட்டேக் அட்டைகளை பெற வேண்டும். நீதிபதிகள், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் ஆகியோருக்கு, அவர்களின் பதவிக்காலம் வரை செல்லத் தக்க வகையில், “ஜீரோ பேலன்ஸ்” கொண்ட பிரத்யேக பாஸ்ட்டேக்குள் வழங்கப்பட உள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே