4வது முறையாக எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..;11 பயணிகள் பலி..!!

எகிப்து நாட்டில் ரயில் தடம் புரண்ட கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .எகிப்து நாட்டின் கலியுபியா மாகாணத்தில் உள்ள கைரோவில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

பயணிகளை ஏற்றுக் கொண்டு கைரோவில் இருந்து, நைல் டெல்டா பகுதியை நோக்கி, பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

நேற்று பிற்பகல் புறப்பட்ட இந்த ரயில், 40 கிலோ மீட்டர் சென்ற நிலையில் திடீரென 4 பெட்டிகள் தடம் புரண்டன.இந்த கோர விபத்தில் ரயிலில் பயணித்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 98 பேர் மீட்கப்பட்டு, அருகே உள்ள 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக, எகிப்து அரசு தெரிவித்துள்ளது. நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்ற 50 ஆம்புலன்ஸ்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த விபத்து கடந்த ஒரு மாதத்தில் நடந்த 4வது மிகப்பெரிய ரயில் விபத்தாகும். கடந்த மார்ச் இறுதியில், தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. 

அந்த விபத்தில், 19 பேர் பலியானார்கள்.  185 பேர் காயமடைந்தனர். இந்த வார தொடக்கத்தில் எகிப்தில் மின்யா அல் குவாம் பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 15 பேர் காயமடைந்தனர்.  அந்த விபத்து நடந்து ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டு உள்ளது.

எகிப்தில் சமீப நாட்களாக தொடரும் அடுத்தடுத்த ரயில் விபத்துகளால் ரயில்வே துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எகிப்தில் வலுத்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே