தமிழகத்தில் இருந்து வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள்..!!

ஊரடங்கு விதிக்கப்ட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ,வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12ஆம் தேதி தமிழக செயலாளர் மற்றும் அரசு ஆலோசகர்கள் உடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் படி பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.

அதில் நாளை முதல் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அப்போது தனியார் பொது போக்குவரத்து ,வாடகை ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கு போது செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களில் இரவு காவல் புரிபவர்களும் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் மூலம் வீட்டிலிருந்து பணியிடத்தில் சென்று வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் தமிழகத்திலிருந்து வடமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த முறை கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர்.

அத்துடன் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் தொழிலாளர்கள் உணவு, இருப்பிடம் இன்றி தவித்ததுடன், தனது சொந்த பந்தங்களை பார்க்க முடியாமல் அவதிப்பட்டனர்.

அத்துடன் பல கிலோமீட்டர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு சிலர் சென்றடைந்தனர்.

இதில் பல உயிரிழப்புகளும் நேர்ந்தது.

இதை கருத்தில் கொண்டு முன்னதாகவே சொந்த ஊர் செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அலை மோதி வருகின்றனர்.

பாட்னா ,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வட மாநிலத்தினர் இன்று இரவு 7 மணிக்கு ரயிலில் செல்ல முன்பதிவு மற்றும் தக்கலில் செல்லவும் முடிவெடுத்து காத்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே