நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அதிமுக மாநிலங்களவை கட்சித் தலைவர் நவநீதகிருஷ்ணன், திமுக மக்கள் கட்சி தலைவர் டி ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லாவை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் பொருளாதார மந்தநிலை வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் கோரினர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், நாட்டை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்துச் செல்லவும் ஆக்கபூர்வமாக விவாதிப்போம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் குடியரசுத் துணை தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது உறுப்பினர்கள் தவறாமல் அவை நடவடிக்கையில் பங்கேற்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று காலை அவை கூடியதும், வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட 4 பேரின் எம்.பி.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.

அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் அண்டை நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமியர் நீங்கலான அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வழி செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்று கார்ப்பரேட் வரி குறைப்புக்கு வழிவகை செய்யும் அவசர சட்டம் மற்றும் இ-சிகரெட் தொடர்பான அவச சட்டத்தையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வருகின்ற 26 ஆம் தேதி அரசியல் சாசன தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டவும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டத் தொடரின் ஒவ்வொரு அமர்வும் முக்கியமானது என்றும் பாஜக எம்பிக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே