“எடப்பாடி பழனிசாமி முதல்வரானது ஒரு அதிசயம்” : ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், “உங்கள் நான்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி, இளையராஜா, விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ரஜினி, இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி வர முடியாது.

60 ஆண்டு கலை பயணம் சாதாரண விஷயமல்ல.

அவர் செய்த தியாகங்கள் ஏராளம். நானும் கூலியாக கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் கமல்ஹாசன் பட்ட கஷ்டங்களை ஒப்பிடுகையில் சாதாரணம்.

ஒரு கவுரவமிக்க குடும்பம் கமல்ஹாசனுடையது.

ஆனால் அதையெல்லாம் விட்டு சினிமாவில் அவர் சாதித்துள்ளார். களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசன் நடிப்பை பார்த்திருக்கிறேன்.

அந்த பையன் என்னமா நடிக்கிறான் என்று என்னிடம் பலர் சொல்ல, டூரிங் டாக்கீஸ் சென்று பார்த்தேன். அந்த குழந்தையுடன் படம் பார்த்த இந்த குழந்தையும் வளர்ந்து படத்திலும் இணைந்தது அதிசயம்.

கமல்ஹாசன் நடிப்பை என்னவென்று சொல்வது? அவரது நடிப்பை பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறேன். வியந்து பிரமித்திருக்கிறேன். ஏன் பல நேரங்களில் பொறாமை கூட பட்டிருக்கிறேன்.

கமல்ஹாசன் நடித்தபோது ஒரு சீனில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஒரு துணியை எடுத்து காயத்தை கட்டி 10 நிமிடங்களில் நடிக்க வந்தார். அவர் மகா நடிகன். நடமாடும் பல்கலைக்கழகம். எங்கெங்கு எந்த விஷயம் கிடைத்தாலும் ஆராய்ந்து எடுப்பார்.

ஆராய்ந்த விஷயத்தை மக்களுக்கு சொல்ல நினைப்பார். ஆனால் அவரது பேச்சு புரியவில்லை என்கிறார்கள்.

தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை என்ன சொல்வது?..

இந்த ரஜினிக்கே அது புரியும்போது எல்லாருக்குமே புரியும். தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது.

எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்து, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது.

எங்களை பயன்படுத்தி அவரவர் கருத்துக்களை திணித்து எங்களை பிரிக்க முடியாது. படங்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொண்டது இல்லை. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள்.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதங்கள் கூட தாங்காது என்று பலரும் விமர்சித்தனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே