அவதூறு வழக்குகளில் முதல்வர் ஆஜராக நிர்பந்திக்க கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 17 கிரிமினல் அவதூறு வழக்குகளில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது என, சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கி டாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

அரசுக்கு எதிராகவும், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதாக, 17 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்டன.

இந்த நிலையில், அண்மையில் பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த ஆட்சியில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தது. அது தொடர்பாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெறும் முன்னர் சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில், ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள 17 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறத் தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று (செப். 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 17 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, வழக்குகள் தொடர்பான விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்குகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது என, சிறப்பு நீதிமன்றத்துக்குத் தெரிவித்த நீதிபதி, மனு மீது அடுத்த மாதம் 8ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கைத் தள்ளிவைத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே