பாகிஸ்தான் வீரர்கள் அதீத திறமைசாலிகள், இந்திய வீரர்களோடெல்லாம் ஒப்பிட முடியாது….வரலாற்றில் பதில் இருக்கு…சீண்டிப்பார்த்த அப்துல் ரசாக்

பாகிஸ்தான் வீரர்கள் அதீத திறமைசாலிகள். இந்திய அணி வீரர்களோடு ஒப்பிட முடியாது. இரு அணிகளும் மோதிப் பார்த்தபின் சிறந்தவர்கள் யார் என முடிவு செய்யலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் பாகிஸ்தான் இணையதளத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் நேர்காணல் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”முதலில் நம் நாட்டு வீரர்களை இந்திய அணியின் வீரர்களோடு ஒப்பிடவே முடியாது. கோலி, பாபர் ஆஸம் இருவரை மட்டுமல்ல யாரையும் ஒப்பிட முடியாது. இந்திய வீரர்களைவிட பாகிஸ்தான் அணி வீரர்கள் அதீத திறமைசாலிகள்.

நம்முடைய கடந்த கால கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பாருங்கள், மிகச் சிறந்த வீரர்கள் இந்திய வீரர்களோடு ஒப்பிடமுடியாத திறமைசாலிகள். முகமது யூசுப், இன்ஸமாம் உல் ஹக், சயீத் அன்வர், மியான்தத், ஜாஹிர் அப்பாஸ், இஜாத் அகமது ஆகியோரை யாருடனும் ஒப்பிட முடியாது.

விராட் கோலியும், பாபர் ஆஸமும் முற்றிலும் வேறுபட்ட வீரர்கள். இருவரையும் ஒப்பிட்டுப் பேச விரும்பினால், இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தியபின், இரு வீரர்களில் சிறந்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

விராட் கோலி சிறந்த வீரர், பாகிஸ்தான் அணிக்கு எதிராகச் சிறப்பாக கடந்த காலங்களில் விளையாடியுள்ளார். அவருக்கு எதிராக நான் பேசவில்லை. இந்தியர்கள் தங்கள் நாட்டு வீரர்களை பாகிஸ்தான் வீரர்களோடு ஒப்பிடாமல் இருந்தால், நாமும் அதேபோல் ஒப்பிடக் கூடாது.

இசட் பிஎல் அணியில் என் தலைமையில் 5 முதல் 6 ஆண்டுகள் வரை பாபர் ஆஸம் விளையாடியுள்ளார். நான் ஒருபோதும் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதில்லை. புத்திசாலியான வீரர், திறமையான பேட்ஸ்மேன் பாபர் ஆஸம். உலக அளவில் பாபர் ஆஸம் தனது திறமையை நிரூபித்ததால்தான் அனைத்துச் சாதனைகளையும் முறியடித்து வருகிறார்”.

இவ்வாறு அப்துல் ரசாக் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே