மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து – உயர் நீதிமன்றத்தில் முறையீடு..!!

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தீ விபத்து குறித்து விசாரிக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் திருத்தொண்டர்கள் சபையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் காணொலி வழியாக கோரிக்கை வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தீ விபத்துக்கு பிறகு நாட்டில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழக, கேரள மக்களின் திருத்தலமாகவும், பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் இன்று காலை 6.40க்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரிக்கவும், தமிழக கோயில்களின் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பல்வேறு துறை அதிகாகளுடன் ஆலோசித்து அரசுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அனைத்து கோயில்களிலும் தீத்தடுப்பு சாதனங்களின் தற்போதைய நிலை மற்றும் திருக்கோவில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

மேலும், அனைத்து கோவில்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆய்வு செய்து, கோவில்களில் உள்ள குறைபாடுகளை களையவும், அனைத்துகோவில்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு நடத்தவும், மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தீ வைத்து நடைபெற்ற பகுதியை தொன்மை மாறாமல் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தவும், அதற்கு மன்பு உரிய பரிகார பூஜைகள் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்றார்.

இது குறித்து விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே