பாகிஸ்தான் : ஹஃபீஸ் சயீதுக்கு 5 ஆண்டுகள் சிறை

ஜமாத்-உத்-தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹஃபீஸ் சயீது, 2008ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு மூளையாக செயல்பட்டவராவார்.

இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் ஹஃபீஸ் சயீதை தடை செய்யப்பட்ட நபராக அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில்.

இதனிடையே ஹஃபீஸ் சயீது மீதான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியது, தடை செய்யப்பட்ட இயக்கங்களில் அங்கம் வகித்தது தொடர்பான வழக்கு பாகிஸ்தானின் லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் இரண்டு வழக்குகளிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும்; தடை செய்யப்பட்ட இயக்கங்களில் அங்கம் வகித்ததற்கு 6 மாதம் சிறை தண்டையும் வழங்கப்பட்டதுடன் இரண்டு வழக்குகளிலும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஹஃபீஸ் சயீது மீது மேலும் 23 வழக்குகள் இருப்பதாக தகவல்கள் கூறும் நிலையில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்தே பாகிஸ்தான் இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே