கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததாகக் கூறிய பிரதமர் மோடிக்கு ப. சிதம்பரம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
நாட்டில் கரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததன் விளைவாகவே நாட்டில் பாதிப்பு குறைவாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு வருகிறார்.
அதேபோன்று உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுவதாகவும், கரோனா குணமடைந்தோர் விகிதம் அதிகமாக இருப்பதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்’ என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார் கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு – சரியான முடிவா?
ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே – இது சரியான முடிவுகளின் பயனா?
ரயில் இன்றி, பஸ் இன்றி பல இலட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே – சரியான முடிவின் விளைவா?
பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே – இது சரியான முடிவுகளின் பயனா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Related Tags :
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.