கொரோனோ விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக் கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் தங்கள் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கொரோனா பரவலைத் தடுக்க தங்கள் மாநிலம் முடிந்த அளவு பாடுபடுவதாக குறிப்பிட்டார்.
சர்வதேச எல்லைகள், பெரிய அண்டை மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பில் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாக கூறிய அவர், இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு இதில் அரசியல் செய்யக் கூடாது என்று வலியுறுத்தினார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் சம முக்கியத்துவம் அளித்து ஒரே இந்தியாவாக செயல்படுவதாகவும் மமதா பானர்ஜி குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மேற்கு வங்க அரசு மெத்தனம் காட்டி வருவதாக அண்மையில் மத்திய அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மமதா பானர்ஜி இப்படி பேசியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.