தங்கக்கடத்தல் ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாகக் கூறி தலைமைச் செயலகம் முன் எதிர்க் கட்சியினர் போராட்டம்

கேரளா தலைமை செயலகத்தில் இன்று நடந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து போயின.

இதன் மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை ஆளும் கட்சி அழிக்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றம் பாஜக குற்றம்சாட்டியுள்ளன.

கேரளாவில் சமீபத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் தலைமையிலான அரசைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தி வருகிறார்.

இது தவிர கரோனா விவகாரத்தைக் கையாளும் விதம், ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளும் இடது ஜனநாயக முன்னணி மீது காங்கிரஸ் கட்சி வைத்தது.

இதையடுத்து கேரளாவில் நேற்று ஒரு நாள் மட்டும் சட்டப்பேரவை கூடியது. இதில் பட்ஜெட்டுக்கான நிதி மசோதா முதலில் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ சதீஸன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசினார். அதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இந்தநிலையில் கேரளா தலைமை செயலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

முக்கிய ஆவணங்கள் தீயில் நாசமாகின.

ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே தீ விபத்து நாடகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் மற்றம் பாஜகவினர் இன்று தலைமை செயலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது திடீரென பாஜகவினர் சிலர் தலைமைச் செயலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே