சட்டமன்றத்திலிருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் தனபால் மறுத்ததால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆனால் அதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித்தலைவர் அளித்த கடிதம் ஆய்வில் உள்ளதாகவும், அது குறித்து சட்டப்பேரவையில் தற்போது விவாதிக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

உரிய முடிவு, உரிய நேரத்தில் எடுக்கப்படும் என்று சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக சட்டப்பேரவை கூடியதும், மறைந்த முன்னாள் சட்ட பேரவை தலைவரும், அதிமுக மூத்த தலைவருமான பி.ஹெச் பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சக்திவேல், முருகன், தேவராஜ், பால சுந்தரம், சுப்ரமணியம், சின்னப்பன் உள்ளிட்ட 13 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.ஹெச்.பாண்டியன், பேரவையின் மாண்பை கட்டிக்காத்தவர் என்றும், தனக்கென தனி முத்திரை பதித்தவர் என்றும் சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டினார்.

பின்னர், மறைந்த உறுப்பினர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பேரவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே