வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு..

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ கோயில்களில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் சுவாமி விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஒரு மணிக்கு தனுர் மாத பூஜை நடத்தப்பட்டது. 2.30 மணிக்கு உற்சவர் மகா மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டு மூலவருக்கு முத்தங்கி சேவை நடந்ததும் அதிகாலை 4 மணிக்கு உற்சவர் மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டார்.

சரியாக 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டதும் உற்சவர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை அடுத்த நம்மாழ்வாருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வேத திவ்ய பிரபந்த பாசுரம் பாடப்பட்டது.

6 மணிக்கு திருவாய் மொழி மண்டபத்தில் உற்சவர் பக்தி உலா நடைபெற்றது.

சொர்க்க வாசல் திறப்பை காண நேற்றிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன்பு குவிந்தனர்.

அசம்பாவிதத்தை தடுக்க ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயிலை சுற்றி 68 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது.

மதுரை அழகர் கோவிலுக்கு உட்பட்ட தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அதிகாலை 4.50 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

சேலத்தில் உள்ள பழமையான கோட்டை அழகிரிநாதர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பின்னர் அதன் வழியாக சென்ற பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனர். முன்னதாக சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பிரசத்தி பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்காவசல் திறக்கப்பட்டது.

இதற்காக சுவாமி பெருமாளுக்கு தங்க அங்கிகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்திலேயே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மட்டுமே சிவ தலங்களில் வைகுந்த வாயில் திறக்கப்படும்.

அண்ணாமலையார் கோவிலில் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே