50 நபர்கள் மட்டுமே அனுமதி; திருமண மண்டபங்களுக்கு மதுரை மாநகராட்சி கட்டுப்பாடு

திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என்று திருமண மண்டபங்களுக்கு மதுரை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.

தமிழக அரசு கரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து, திருமண மண்டபங்களை செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

அதனால், மதுரையில் திருமண மண்டபங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து அதன் உரிமையாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தலைமை வகித்து பேசினார்.

அவர் பேசியதாவது:

கரோனா தொற்று நோய் அதிகமானவர்கள் குவியும் இடங்களில்தான் பரவுகிறது. அதனால், திருமண மண்டப உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

திருமண மண்டபத்திற்கு வெளியில் கைகளைக் கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்தி அனைவரையும் கைகளை கழுவியும், தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொண்ட பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

திருமண மண்டபத்திற்கு உள்ளே அமர்வதற்கு இருக்கைகள் 6 அடி சமூக இடைவெளியின் படி அமைக்க வேண்டும்.

திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்பும், நிகழ்ச்சி முடிந்த பின்பும் கிருமி நாசினி கொண்டு மண்டபத்தை சுத்தம் செய்ய வேண்டும். மாநகராட்சிக்கு ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டுமென்றாலோ, விவரங்கள் அறிய வேண்டுமென்றாலோ மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண்.842 842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள திருமண மண்டப உரிமையாளர்கள் மருந்து பெட்டகத்தினை வாங்கி பயன் பெறுவதுடன் தங்களது திருமண மண்டபங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கலாம்.

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை உடனடியாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, சுகாதார அலுவலர்கள்ராஜகண்ணடன், சிவசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே